இலங்கையின் வைத்தியத்துறை வரலாற்றில் ஒட்டிப்பிறந்த 5 வயது இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த சாதனை பாராட்டுக்களை பெற்றுவரும் அதேவேளை, நாட்டின் அரச சுகாதார துறையின் திறன்கள் மற்றும் சவால்கள் தொடர்பான விவாதத்தையும் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

பேராதனை போதனா வைத்தியசாலையின், சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலை மற்றும் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவர்கள் குழு ஒன்றிணைந்து ஜூன் 10 ஆம் திகதி மிகவும் சிக்கலான இந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டனர்.

இதில் லினுலி தருல்யா மற்றும் லிதுலி மனுல்யா ஆகிய இரட்டையர்கள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.

2021 ஆம் ஆண்டு மாவனல்லை, அரணாயக்க பகுதியில் பிறந்த இந்த இரட்டையர்கள் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக நிபுணர்களின் நெருக்கமான கண்காணிப்பில் இருந்தனர்.

இறுதி உடல் பிரிப்பு சத்திரசிகிச்சைக்கு முன்னர் விரிவான பரிசோதனைகள், திட்டமிடல்கள் மற்றும் பல நடைமுறைகள் மருத்துவ குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் சிக்கலான சிறுவர் சத்திரசிகிச்சைகளில் ஒன்றாக கருதப்படும் இந்த அறுவை சிகிச்சையின் மூலம் இரு குழந்தைகளும் தனித்தனி நபர்களாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.

இலங்கை மருத்துவ நிபுணர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவத்திற்கு இந்த சாதனை பெரும் சான்றாக அமைந்துள்ளது.

இதேவேளை, மருந்துகள், உபகரணங்கள் மற்றும் நிதி வளங்கள் பற்றாக்குறை காரணமாக அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாகும் அரச சுகாதார துறையின் நிலை குறித்த விவாதத்தையும் இந்த சாதனை மீண்டும் தூண்டியுள்ளது.

இவ்வாறான உயர் மட்ட சிறப்பு மருத்துவ நடைமுறைகளை நாட்டிற்குள்ளேயே மேற்கொள்ளும் திறன் இலங்கைக்கு இருப்பதற்கு இந்த சத்திரசிகிச்சை சான்றாக அமைந்துள்ளதாக மருத்துவர்களும் பொதுமக்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரச வைத்தியசாலைகளில் மேலதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டால் இதுபோன்ற திறன்களை மேலும் மேம்படுத்தலாம் என்றும் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதோடு  வெளிநாடுகளில் அதிக செலவில் சிகிச்சைகளை நாடும் நிலையை குறைக்கலாம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

லினுலி மற்றும் லிதுலி ஆகியோரின் வெற்றிகரமான பிரிப்பு, இலங்கை மருத்துவத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

இது நாட்டின் பொது சுகாதார அமைப்பின் ஆற்றலையும் சவால்களையும் ஒரே நேரத்தில் எடுத்துக்காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here