ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதாகவும், அந்த வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் தாக்கப்பட மாட்டாது என்றும் ஈரான் அடுத்த சில நாட்களில் பகிரங்க அறிவிப்பை வெளியிடும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு ஈரான் அறிவிக்காவிட்டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை அதிகாரிகள் குறிப்பிடவில்லை.
எனினும் “அது அவர்களின் நிலைப்பாடாக இல்லாதபட்சத்தில் அது அவர்களுக்கு சிறந்த நாளாக அமையாது” என அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
இதேநேரம் கடந்த சனிக்கிழமை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் ஓமான் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசைதி சந்திப்புக்கு பின்னர் ஈரான் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இந்த வாரம் நீரிணையில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், கடந்த மாதம் அமெரிக்கா-ஈரான் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சீர்குலைக்க முயன்ற ஈரானின் “தவறான பிரிவு” ஒன்றால் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் விவரித்தனர்.
தெஹ்ரானில் அமெரிக்காவுடனான இராஜதந்திரத்தை ஆதரிக்கும் மிதவாதிகளுக்கும், ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை எதிர்க்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே அதிகார போராட்டம் நடப்பதாக வெள்ளை மாளிகை கருதுகிறது.
வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தவறுதலாக நடந்தது என ஈரான் அமெரிக்காவிடம் ஒப்புக்கொண்டதாகவும், “நாங்கள் தவறு செய்துவிட்டோம்” என கூறியதாகவும் மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.
எனினும் அவ்வாறு ஈரான் தெரிவித்த போதிலும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதிலடியாக தாக்குதல் நடத்த தீர்மானித்தார். “நீங்கள் எங்களை தாக்கினால், நாங்கள் 20 மடங்கு பதிலடி கொடுப்போம்” என அவர் கூறியதாக அதிகாரிகள் கூறினர்.








