சட்டவிரோதமாக முதல் வடிவத்தை மாற்றி தயாரிக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களுடன் 16 பேர் ஹோமாகம பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சத்தமாக, அதிவேகமாக மற்றும் ஆபத்தான முறையில் செலுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் குறித்து கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய ஹோமாகம பொலிஸ் போக்குவரத்து பிரிவு அப்பகுதியில் சோதனை நடத்தியது.
இதன்போது சைலன்சர் சத்தம் மாற்றப்பட்டிருந்த,பக்க கண்ணாடி, மட் கார்ட், இலக்கத் தகடு அற்ற மற்றும் விளக்கு அமைப்பு மாற்றப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் அடையாளம் காணப்பட்டன.
இதனை அடுத்து குறித்த மோட்டார் சைக்கிள்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பரிசோதகரிடம் சமர்ப்பிப்பதற்காக பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
இதேநேரம் கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்
சந்தேகநபர்கள் வரும் 22ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் ஹோமாகம தலைமை பொலிஸ் போக்குவரத்து பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.








