கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும் தகவல்களை இணையம் வழியாக பார்த்தல் மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 44 வயதுடைய திசாநாயக்க என்ற வைத்தியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொரொண்டோ பொலிஸின் இணையவழி சிறுவர் துன்புறுத்தல் விசாரணை பிரிவினர் நடத்திய விசாரணையை தொடர்ந்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
2026 ஜனவரி மாதம் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து பெப்ரவரி மாதம் தொடர்புடைய மருத்துவமனை மற்றும் சந்தேகநபரின் தனிப்பட்ட வீடு சோதனை செய்யப்பட்டு, அவர் பணியின் போது பயன்படுத்திய கணினி உட்பட சில மின்னணு சாதனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையவற்றை வைத்திருத்தல் மற்றும் இணையம் வழியாக அவற்றை பெற்றுக்கொள்ளுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபரை நேற்று (21) ஒன்டாரியோ உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்றும் விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் சந்தேக நபரான வைத்தியரின் தொழில்முறை கடமைகளுடன் தொடர்புடையவை என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை வெளிவரவில்லை என்று டொரொண்டோ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் அறிக்கை வெளியிட்ட ‘Hospital for Sick Children’ மருத்துவமனை, இந்த சம்பவம் குறித்து தாங்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்ததாக தெரிவித்துள்ளது.
இந்த விசாரணை பற்றி அறிந்தவுடன் வைத்தியர் திசாநாயக்கவின் சேவையை உடனடியாக இடைநிறுத்தியதாகவும், நோயாளிகளுக்கோ அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கோ இந்த தீர்மானத்தால் ஏதேனும் ஆபத்து இருப்பதாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் மருத்துவமனை அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.








