நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, இன்று ஒகஸ்ட் 10 காலை நிலவரப்படி காசல்ரி மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்கள் இரண்டும் வான் கசிவு மட்டத்தை அடைந்துள்ளதாக குறித்த நீர்த்தேக்கங்களின் பொறுப்பு பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
காசல்ரி நீர்த்தேக்கம் வான் கசிவு மட்டத்தை விட 1.2 அடி உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குறித்த நீர்த்தேக்கத்திற்கு 25 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இதேநேரம் மவுசாகலை நீர்த்தேக்கத்தில் வான் கதவு மட்டத்தை விட 3.4 அடி உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 29 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்த இரண்டு நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் உயர்ந்ததை அடுத்து, கெனியன், லக்சபான, புதிய லக்சபான, பொல்பிட்டிய மற்றும் விமலசுரேந்திர அணைகளில் மின் உற்பத்தி அதிகபட்ச கொள்ளளவில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் மஸ்கெலியா ஓயா அணையின் வான் கதவுகள் திறக்கப்படும் சாத்தியம் உள்ளதால், அணையின் இருபுறமும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








