பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பித்துள்ளது. சீனாவின் தன்னியக்க வான் வாகன நிறுவனமான EHang (ஈஹேங்)தனது தொழில்நுட்பத்தை அரச அதிகாரிக களுக்கு விளக்கியுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சில் அமைச்சர் அனுர கருணாதிலக மற்றும் EHang நிறுவன பிரதிநிதிகள் குழுவுடன் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கொனார் யாங் (Conor Yang) மற்றும் நடவடிக்கைகளுக்கான பொது முகாமையாளர் லீ (Xiao Na Lee) ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த முன்மொழியப்பட்ட சேவை சுற்றுலா, அவசர மற்றும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் தேவைகளுக்கு பயன்படுத்தப்படலாம் என அமைச்சர் தெரிவித்தார்.

வணிக ரீதியான பயணிகள் ட்ரோன் சேவைகளை நடத்துவதற்கு விமான பாதுகாப்பு, ஒழுங்குமுறைகள், விமான போக்குவரத்து முகாமைத்துவம், அவசர நடைமுறைகள், சைபர் பாதுகாப்பு, தரவு பாதுகாப்பு மற்றும் நியமிக்கப்பட்ட தரையிறங்கும் தளங்கள் தொடர்பான முறையான அனுமதிகள் தேவை என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இந்த திட்டத்திற்கு சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை விமானப்படை, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு, முதலீட்டு சபை, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு தேவைப்படும் என கூறப்படுகிறது.

(ஈஹேங்) EHang ட்ரோன் விபரங்கள்

EHang நிறுவனத்தினர் தங்களது மின்சார செங்குத்து டேக் ஆஃப் முறைமை மற்றும் தரையிறங்கும் eVTOL விமானம் குறித்து விளக்கியுள்ளனர்.

அதன்படி, 2 பயணிகள் பயணிக்கக்கூடிய இந்த விமானத்தில் 16 இறக்கைகள், 12 மின்கலத் தொகுப்புகள் மற்றும் 3 விமான கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளன. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மத்திய கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து தானாக இயக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிகிரியா மற்றும் பிதுரங்கலை சுற்றிய பறப்புகள் மற்றும் கொழும்பு மற்றும் துறைமுக நகரத்திற்குள் சேவைகள் போன்ற சுற்றுலா பயன்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது. துறைமுக நகரத்திற்குள் ஒரு செயல்முறை வலயத்தை அமைக்கும் முன்மொழிவும் முன்வைக்கப்பட்டது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொழும்பில் உள்ள ஹோட்டலுக்கு பயணிக்கும் ஒரு பயணிக்கு இந்த சேவையின் கீழ் 20 டொலர் முதல்  30 டொலர் வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என EHang (ஈஹேங்) பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தற்போது இந்த முன்மொழிவு பேச்சுவார்த்தை மற்றும் திட்டமிடல் நிலையில் உள்ளது. எந்தவொரு வணிக நடவடிக்கைகளையும் ஆரம்பிப்பதற்கு முன்னர் முறையான அனுமதி தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here