எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், அவற்றை தயாரிக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவருடமும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வாக்குப்பெட்டிகள் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவுகளில் தயாரிக்கப்பட்டு வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அட்டைப் பெட்டிகள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டன. 2020 பொதுத் தேர்தலில், மர மற்றும் அட்டைப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன.
நாங்கள் இந்த முறை அட்டை பெட்டிகளை மட்டுமே பயன்படுத்துவோம்.” என்று அவர் கூறினார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு சுமார் 10 பில்லியன் ரூபாய் போதுமானதாக இருக்குமா என குறித்த ஊடகம் வினவியதையடுத்து, 8 பில்லியன் ரூபாய் மட்டுமே செலவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
“அரச நிறுவனங்களில் இருந்து வாகனங்களை வாடகைக்கு பெறும் போது நல்ல நிலையில் உள்ள வாகனங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தலின் போது நாங்கள் அவற்றை பழுதுபார்ப்புக்கு பணம் செலுத்த முடியாது.
முன்னதாக, பல்வேறு அரச நிறுவனங்கள் பழுதுபார்க்க வேண்டிய சில வாகனங்களை எங்களுக்கு அனுப்பி வந்தன. பின், அவற்றை எங்கள் செலவில் சரி செய்து, தேர்தல் தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தமுறை அவ்வாறு செய்ய மாட்டோம்.” என்றார்.
வாக்காளர்களின் விரல்களில் அழியாத அடையாளங்களுக்கு பயன்படுத்தப்படும் மை, இந்த முறை இறக்குமதி செய்வதற்கு பதிலாக உள்ளூர் விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த முறையும் உள்ளூர் விநியோகஸ்தர் மூலமாகவே அவை பெற்றுக்கொள்ளப்பட்டன. அதற்கு முன், நாங்கள் ஒரு வெளிநாட்டு விநியோகஸ்தர்களிடமிருந்து அழியாத மையை இறக்குமதி செய்து பாதுகாத்து வந்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.







