இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு புரோஸ்டேட் (முன்னிற்குஞ்சுரப்பி) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது தனது வருடாந்திர மருத்துவ அறிக்கை வெளியிடப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற தனது வேண்டுகோளின் பேரில், அது இரண்டு மாதங்களுக்குத் தாமதப்படுத்தப்பட்டதாக நெதன்யாகு கூறியுள்ளார். ஈரான் பரப்பும் “பொய்ப் பிரசாரத்தைத்” தடுப்பதற்காகவே இது வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“எனது புரோஸ்டேட்டில் ஒரு சிறிய மருத்துவப் பிரச்சினை இருந்தது, அது முழுமையாகக் குணப்படுத்தப்பட்டது. கடவுளுக்கு நன்றி, அது இப்போது சரியாகிவிட்டது,” என்று கூறியுள்ள அவர், தற்போது தான் “சிறந்த உடல் நிலையில்” இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறியுள்ள நெதன்யாகு, சமீபத்திய பரிசோதனையின்போது, மருத்துவர்கள் புரோஸ்டேட்டில் “ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான ஒரு சிறிய கட்டியைக் ” கண்டுபிடித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
“பரிசோதனையில், அது எந்தவித பரவலோ அல்லது மெட்டாஸ்டாசிஸோ இல்லாத, மிகவும் ஆரம்ப நிலை கட்டி என்பது தெரியவந்தது,”
மேலும், சிகிச்சையின் மூலம் அந்தக் கட்டி முழுமையாக அகற்றப்பட்டதோடு, நோயின் எந்த அறிகுறிகளும் தற்போது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








