யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (28/08/2024) நடைபெற்றது.

மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், எதிர்காலத்தில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.

குடிநீர் பிரச்சினை, வீதி சீரின்மை, காணி பிரச்சினைகள், போக்குவரத்து சிக்கல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்தும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

யாழ். மத்திய பஸ் நிலையத்திலும், முற்றவெளி மற்றும் கோட்டையை சூழவுள்ள பகுதிகளிலும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

இந்த முறைப்பாடுகளுக்கு அமைய, யாழ். மத்திய பஸ் நிலையத்தில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு, கௌரவ ஆளுநர் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளனர்.

அத்துடன் பஸ் நிலையத்தில் 24 மணித்தியாலமும் பொலிஸ் காவலரண் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் கூறினார்.

மேலும் முற்றவெளி மற்றும் கோட்டையை சூழவுள்ள பகுதிகளில் இடம்பெறுவதாக கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க, சிறந்த பொறிமுறை ஒன்றை திட்டமிட்டு துரித நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here