பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாமாபொல பிரதேசத்தில் சக ஊழியர்களால் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி,அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் ஹாமாபொல பிரதேசத்தில் உள்ள மணல் குவாரி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.09) இரவு தனது சக ஊழியர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இந்த முரண்பாடு எல்லை மீறியதில் சக ஊழியர்களால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பிபில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலையுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.








