தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரண்டு சிவில் அதிகாரிகள் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை பல்வேறு பகுதிகளில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சுகயீனமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், மாரடைப்பு போன்ற இயற்கையான காரணங்களால் அவர்கள் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது என்றார்.
கோப்பாய் உரும்பிராய் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய 33 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கெஸ்பேவ பிரதேசத்தில் அமைந்துள்ள சிறி சதஹம் பிக்ஷு அறமயே வாக்களிப்பு நிலைய பிரதானியாக நியமிக்கப்பட்டிருந்த 48 வயதுடைய பெண் ஒருவரும் கடமையில் ஈடுபட்டிருந்த போது திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.
பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கொபேகனே பிரதேசத்தின் வாக்களிப்பு நிலைய ஊழியர்களுடன் தொடர்புடைய 57 வயதுடைய ஒருவரும் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த போது திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மூன்று அதிகாரிகளும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அதேவேளை, மரணங்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் டிஐஜி தல்துவா மேலும் தெரிவித்துள்ளார்.








