கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் அமைந்துள்ள சந்திப் பிள்ளையார் ஆலயத்தின் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பல்வேறு அபிவிருத்தி தொடர் திட்டம் தொடர்பாகவும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து அவர்களுக்கு உரிய தீர்வினை உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,
நாளைய தினம் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு பட்ஜெட் வெளிவரவுள்ளதாகவும் அதில் ஏழை எளிய மக்களுக்கு நன்மை தரக்கூடிய வகையிலான பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்ட வகையில் வெளிவர உள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து மக்கள் பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, சட்டவிரோத மணல் அகழ்வு போன்ற பல்வேறு வகையான குற்றச்செயல்கள் நடைபெற்று வருவதாகவும் இதற்கு பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.


[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]








