வெளிநாடு சென்றுள்ள தமது சட்டத்தரணி நாடு திரும்பியதன் பின்னர், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் கைது தொடர்பாக வெளியிட்ட கருத்து ஒன்றுக்காக வாக்குமூலம் பெறும் நோக்கில் ரணில் விக்ரமசிங்கவை கடந்த 17ஆம் திகதி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைத்திருந்தது.

எனினும் புத்தாண்டு காலப்பகுதியில் தமக்கு சமூகமளிக்க முடியாது என்றும் பிறிதொரு தினத்தை வழங்குமாறும் ரணில் கோரியிருந்தார்.

அதன்படி அவரை எதிர்வரும் 25ஆம் திகதி முன்னிலையாகுமாறு கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில், அரச வங்கியொன்றில் பேணப்பட்ட மாகாணசபையின் நிலையான வைப்புகள் முதிர்ச்சியடைவதற்கு முன்னதாகவே மீளப்பெறப்பட்டதன் ஊடாக நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்து, அவர் கைது செய்யப்பட்டார்.

எனினும் தாம் பிரதமராக இருந்த காலப்பகுதியில், திறைசேரியின் செயலாளர் விடுத்த சுற்றுநிரூபத்துக்கு அமைவாகவே சாமர சம்பத் இவ்வாறு செய்தார் என்று ரணில் விக்ரமசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாகவே கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here