Google Chromeக்கு புதிய சவால் – OpenAI அறிமுகம் செய்த ChatGPT Atlas AI உலாவி!
உலகின் முன்னணி வலை உலாவியான Google Chrome-க்கு கடுமையான போட்டியாக, செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட புதிய உலாவி ஒன்றை OpenAI நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ChatGPT Atlas எனப் பெயரிடப்பட்ட இந்த உலாவி, கடந்த (21) ஆம் திகதி Apple MacOS இயங்குதளத்தில் முதன்முறையாக பயன்பாட்டுக்கு வந்தது.
Atlas உலாவியின் முக்கிய சிறப்பம்சமாக “Agent Mode” எனப்படும் ஒரு புது அம்சம் அமைந்துள்ளது. இது ஒரு பணம் செலுத்தும் வசதி (paid feature) ஆகும். இதன் வழியாக, பயனர்களுக்குப் பதிலாக இணையத்தில் தேடல்களை தானாகவே ChatGPT செயற்கை நுண்ணறிவு இயக்கும். இது, தேடலை மேலும் விரைவாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் திறனை வழங்குவதாக OpenAI தெரிவித்துள்ளது.
Agent Mode வசதி தற்போது ChatGPT Plus சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலையில், OpenAI எதிர்காலத்தில் இதனை மேலும் விரிவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
Atlas உலாவி அறிமுகம், OpenAI நிறுவனத்தின் இணைய சேவைகளை மேலும் ஊக்குவிக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், Etsy, Shopify, Expedia, Booking.com போன்ற பிரபல இணைய தளங்களுடன் OpenAI புதிய கூட்டணிகளை ஏற்படுத்தியுள்ளது.
OpenAI வெளியிட்டுள்ள Atlas உலாவி, செயற்கை நுண்ணறிவு வலை உலாவலுக்குள் சேரும் புதிய அதிரடி அத்தியாயமாக கருதப்படுகிறது. இது, இணைய உலாவலின் புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க ஒரு முக்கிய அடி எடுக்கிறது என்றே கூறலாம்.
![]()