2026ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாதணிகளை வழங்குவதற்கான வவுச்சர்கள் வழங்கப்படும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரு சோடி பாதணிகளைப் பெறுவதற்கான இந்த வவுச்சர்கள், 2025ஆம் ஆண்டின் பாடசாலை தவணை முடிவதற்குள் பயனாளிகளான மாணவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வவுச்சர்கள், பாதுகாப்பான முறையில் QR குறியீடு கொண்டதாக அச்சிடப்பட்டு, கல்வி அமைச்சகம் தயாரித்த ‘பரிசு அட்டைகள்’ கைப்பேசி செயலியில் ஸ்கேன் செய்யக்கூடிய வகையில் தயாரிக்கப்படவுள்ளன. இதன் மூலம் பயன்பாட்டின் நேர்மை, கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை எடுக்கும் சாத்தியம் அதிகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் மாணவர்களின் எண்ணிக்கை 250இற்கும் குறைவாக உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் 6,44,000 மாணவர்கள், 251 முதல் 500 வரையான மாணவர்கள் கொண்ட தோட்டப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 53,093 மாணவர்கள், விசேட தேவைகள் உள்ள 30 பாடசாலைகளில் கல்வி பெறும் 2,300 மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் தெரிவுசெய்யப்பட்ட 30,000 மாணவர்கள் ஆகியோருக்கு வவுச்சர்கள் வழங்கப்படும்.

பாதணிகள் வழங்கும் திட்டம் மாணவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதோடு கல்வியில் அவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here