பொதுமக்கள் ஒரே கணினி செயலியின் மூலம் அனைத்து முக்கியமான அரச சேவைகளையும் எளிதாகப் பெறும் வகையில், ‘அரசாங்க சுப்பர் அப்’ (Government SuperApp) எனும் புதிய செயலியை உருவாக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது அரச சேவைகளைப் பெறுவதற்கான முறைமைகள் துறைக்கு துறையாக வேறுபட்டுள்ளதுடன், பன்முக அடையாளத் திரிபுகள் மற்றும் மீண்டும் மீண்டும் தரவுகளைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் காரணமாக, பொதுமக்களுக்கு கடுமையான சிரமங்கள் ஏற்பட்டுவருகின்றன.
இவ்வாறான சிக்கல்களின் காரணமாக வருடாந்தம் 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுவருவதாகவும், அதனைத் தடுக்கும் நோக்கில் இச்செயலி அறிமுகப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார திட்டத்தின் ஒரு பகுதியாக, 18 வயதுக்கு மேற்பட்ட 14 மில்லியன் பிரஜைகள் மற்றும் வருடாந்தம் சேவைகளை அணுகும் 02 மில்லியன் உபதிரைகள் ஆகியோர் தடையின்றி சேவைகளைப் பெறும் வகையில், இந்த செயலி உருவாக்கப்பட உள்ளது.
செயலி 2025-2026 காலப்பகுதியில் இரண்டு கட்டங்களாக உருவாக்கப்படவுள்ளதாகவும், இதற்காக மொத்தமாக ரூ.500 மில்லியன் வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் தலைமையிலான டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் இதற்கான யோசனையை முன்வைத்து, அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








