2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்றைய தினம் டுபாயில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் இலங்கை அணியின் சார்பில் 8 வீரர்கள் பெயரிடப்பட்டிருந்தனர்.
இவர்களில் 3 வீரர்கள் மாத்திரமே அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இதன்படி, நுவன் துஸாரவை 4 கோடியே 80 இலட்சம் இந்திய ரூபாய்க்கும், டில்ஸான் மதுசங்கவை 4 கோடியே 60 இலட்சம் இந்திய ரூபாய்க்கும், மும்பை அணி ஏலத்தில் வாங்கியது.
மேலும், வனிந்து ஹசரங்க 1 கோடியே 50 இலட்சம் அடிப்படை விலையில் ஹைதராபாத் அணி வாங்கியது.
இதேவேளை, இலங்கை அணித்தலைவர் குசல் மெண்டிஸ், முன்னாள் அணித்தலைவர் தசுன் சானக, சரித் அசலங்க, துஸ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகிய இலங்கை வீரர்கள் ஏலத்தில் வாங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஏலத்தில் அவுஸ்திரேலிய அணியின் இரு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்சை ஹைதராபாத் அணி 20 கோடி 50 இலட்சம் இந்திய ரூபாவிற்கு ஏலம் எடுத்தது.
IPL வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை பெட் கம்மின்ஸ் பெற்று அடுத்த ஒரு மணி நேரத்தில் ஏலத்தில் பெயர் வாசிக்கப்பட மிட்சல் ஸ்டார்க் அந்த சாதனையை முறியடித்தார்.
அவுஸ்திரேலிய அணியின் வேக பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் கொல்கத்தா அணியினால் 24 கோடியே 75 இலட்சம் இந்திய ரூபாவிற்கு ஏலம் எடுக்கப்பட்டு இந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான IPL ஏலத்தில் பஞ்சாப் அணியினால் 18 கோடியே 50 இலட்சம் இந்திய ரூபாயிற்கு ஏலம் எடுக்கப்பட்ட ஷாம் கர்ரன் இதற்கு முன்னர் இந்த சாதனைக்கு உரியவராக காணபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.