அந்தமான் தீவுகளை சுற்றியுள்ள ஆழ்கடல் பகுதிகளில் இயங்கும் அனைத்து பலநாள் மீன்பிடி படகுகளும் வரும் நாட்களில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு நிலை எதிர்பார்க்கப்படுவதால் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதியை விட்டு வெளியேறி பாதுகாப்பான நீர்ப்பரப்புக்கு செல்லுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு கிழக்கே ஆழ்கடல் பகுதியில், குறிப்பாக அந்தமான் தீவுகளை சுற்றி தற்போது உருவாகி வரும் தாழமுக்க பகுதியை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.
இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய கஹவத்த, இந்த அமைப்பு படிப்படியாக தீவிரமடைந்து இந்தியாவை நோக்கி நகரும் என்றும், இந்திய பிரதான நிலப்பரப்பை நெருங்கும் போக்கு காணப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த அமைப்புடன் தொடர்புடைய பாதகமான வானிலை மேலும் பல நாட்களுக்கு தொடரக்கூடும் என குறிப்பிட்டார்.
அந்தமான் தீவுகளை சுற்றி இயங்கும் பலநாள் மீன்பிடி கலங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதியை விட்டு வெளியேறி கரையை நோக்கி அல்லது பிற பாதுகாப்பான கடல் பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அந்தமான் கடல் மற்றும் வடக்கு வங்காள விரிகுடாவில் இயங்கும் படகுகள் சீரற்ற வானிலை அமைப்பிலிருந்து விலகி இலங்கையை நோக்கி தெற்கு நோக்கி நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
எனினும், பல பலநாள் மீன்பிடி கலங்கள் இன்னும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை திணைக்களம் அவதானித்துள்ளது.
நிலவும் சூழ்நிலையில் தொடர்ந்து மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வது, படகுகளுக்கும் அவற்றின் பணியாளர்களுக்கும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என கஹவத்த எச்சரித்தார்.








