இந்த ஆண்டில் ஏதாவது ஓர் வழியில் ஆட்சி கைப்பற்றப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தற்போதைய மோசமான ஆட்சியை தோற்கடித்து ஏதாவது வழியில் ஆட்சியை பெற்றுக்கொள்ள தயார்.
மக்களை நெருக்கடியில் ஆழ்த்திய ஆட்சியாளர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான போரே நடைபெறுகின்றது. இந்தப் போரிலிருந்து மக்கள் பின்வாங்கக் கூடாது. நிச்சயமாக இந்த போரை வெற்றிகொள்வேண்டும்.
ஹம்பாந்தோட்டையில் மகிந்த ராஜபக்ச பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டார்.
“துறைமுகம் அமைத்தார் கப்பல் இல்லை, மைதானம் அமைத்தார் போட்டிகள் இல்லை, சிறைச்சாலை அமைத்தார் அது நிரம்பியுள்ளது. இந்தக் கள்வர் கூட்டம் பயன்படுத்தும் வாகனங்கள் நாட்டுக்கு தாக்கு பிடிக்கக் கூடியதல்ல.
இவர்களின் வாகனங்கள் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு இரண்டு மூன்று கிலோமீற்றர் மட்டுமே பயணிக்கக்கூடியவை. ரணிலின் வாகனம் 3000 லட்சம் ரூபா பெறுமதியானது. இந்த கள்வர் கூட்டத்தை விரட்டியடிப்போம். நேரடியாக கூறினால் நாம் ஆட்சியை கைப்பற்றுவோம்” என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.