ஈரானுடன் ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான அமெரிக்க முயற்சிகளைப் பலவீனப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உளவு அமைப்புகள் இவ்வாறு ட்ரம்ப் நிர்வாகத்தை எச்சரித்துள்ளதாக ‘தி வொஷிங்டன் போஸ்ட்’ இதழ் செய்தி தெரிவித்துள்ளது.
ஈரானின் ஆதரவு பெற்ற குழுவான ஹிஸ்புல்லாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே முரண் அதிகரித்து வரும் சூழலில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் மோதலை நிறுத்துவதற்காக ஈரானுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது. எனினும் இஸ்ரேல் லெபனான் மீது குண்டு வீச்சை தொடருமானால் குறித்த ஒப்பந்தத்தை தொடருவதில் சிக்கல் எழும் என எச்சரிக்கப்படுகிறது.
காரணம் ,ஈரான், லெபனான் மீது தாக்குதலை நிறுத்துவதையும் ஓர் முக்கிய நிபந்தனையாக முன்வைத்து வருகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானம் 4 இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றதைத் தொடர்ந்து, தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலின் காரணமாக, அமெரிக்காவும் ஈரானும் சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த தங்களது அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஒத்திவைத்தன. அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் கூட தனது பயணத்தை ரத்து செய்தார் என கூறப்படுகிறது.
இதேநேரம் இஸ்ரேலில் தேசியத் தேர்தல் இடம்பெறவிருக்கும் நிலையில் மோதலை நிறுத்த கூடாது என்று இஸ்ரேலுக்குள் நெதன்யாகு மீது பெரும் அழுத்தம் உள்ளது என்றும் இப்போது மோதலை நிறுத்துவது பலவீனமாகத் தோன்றும் என இஸ்ரேலியத் தலைவர்கள் கருதுகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
லெபனான் விவகாரத்தில் நெதன்யாகுவுடன் தனக்கு ஒரு கருத்து முரண்பாடு உள்ளதாக ட்ரம்ப், கூறியுள்ளதோடு இஸ்ரேலை அமைதி காக்குமாறு வெளிப்படையாக அறிவுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், தெற்கு லெபனானில் 200 சதுர மைல்களுக்கும் அதிகமான நிலப்பரப்பை இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, மேலும் இஸ்ரேல் இராணுவம் அங்கிருந்து வெளியேறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








