தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ள வரி, இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி தொழிலை பாதித்து அந்நிய செலாவணி வருமானத்தை குறைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தேங்காய் ஏற்றுமதித்துறை அந்நிய செலாவணி ஈட்டுவதில் பெரும் பங்கு கொண்டது என்றும், புதிய வரி தொடர்பில் தொழில் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
“இந்த புதிய வரியால் இறக்குமதி செலவு ஒரு கிலோவிற்கு 1,250–1,400 ரூபா வரை அதிகரிக்கும். இதன் காரணமாக உள்ளூர் தேங்காய்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறைந்து உள்நாட்டு எண்ணெய் உற்பத்திக்கு திரும்பும்.
இதனால் பண்ணை விலை சரிந்து, ஏற்றுமதி ஒப்பந்தங்கள் குறைவடையும். இதேவேளை இறக்குமதி முற்றாக நின்று விடுமானால் அரசுக்கு வரியும் பெற்று கொள்ள முடியாது” என அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய வரியால் 2026ஆம் ஆண்டின் மூன்றாம், நான்காம் காலாண்டுகளில் ஏற்றுமதி வருமானம் குறைவதோடு, அரச வருமானமும் குறையும், தொழில்துறை கடும் நெருக்கடியை சந்திக்கும் என கோப் குழுவின் தலைவரான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் பொது நிதி குழுவான கோப் குழுவில் நேரடியாக கேள்வி எழுப்பியதாகவும், இந்த முன்மொழிவின் விளைவுகளை அரசாங்கம் கவனமாக ஆராய வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.








