ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) சுழற்சி சர்வாதிகாரியான ஷம்மி சில்வாவை பதவியில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஷம்மி சில்வாவிற்குப் பதிலாக, முன்னாள் ரோயல் கல்லூரி கிரிக்கெட் வீரரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான எரான் விக்ரமரத்ன கிரிக்கட் சபையை நிர்வகிக்கும் இடைக்காலக் குழுவிற்கு தலைமை தங்குவார் என டெய்லி மிரர் பிரத்தியேகமாக அறிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
குறித்த செய்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
எட்டு ஆண்டுகளாக ஷம்மி சில்வா இலங்கை கிரிக்கட்டை நடத்தி வருகிறார். வாக்குகள் விலைக்கு வாங்குதல் மற்றும் அரசியல் ஆதரவைப் பயன்படுத்தி, எதிர்ப்பாளர்களை ஒடுக்கி அதிகாரத்தில் நீடித்ததால், விமர்சகர்கள் அவரை ஒரு “சர்வாதிகாரி” என்று அழைக்கின்றனர்.
சில்வாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வீரர்கள், ரசிகர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு குழுக்களிடமிருந்து அழுத்தம் அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் யதார்த்தத்தை புரிந்து கொண்ட ஜனாதிபதி “விரைவில்” பதவி விலகுமாறு சில்வாவிடம் கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கட் சபையின் பணத்தை மோசமாகக் கையாளுதல்,தமக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்ளுதல், முழுமையான கட்டுப்பாட்டுடன் சபையை நடத்துதல் ICC நிதியுதவி மற்றும் அனுசரணைகளைப் பெறுவதால் கிரிக்கட் சபை ஒரு “தனியார் அமைப்பு” என்று சில்வா கூறியமை,போன்ற குற்றச்சாட்டுக்கள் சில்வா மீது முன் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தலைமை கணக்காய்வாளர் ஆகியோரின் 4 விசாரணை அறிக்கைகள், கிரிக்கட் சபைக்கு ஒரு முழுமையான சீரமைப்பு தேவை என்று குறிப்பிட்டிருந்தன.
முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரியும் இதே கருத்தைக் கூறி ஒரு அமைச்சரவை அறிக்கையை சமர்ப்பித்தார்.
2023-ஆம் ஆண்டு, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, சில்வாவைப் பதவியிலிருந்து நீக்கப் போராடினார்.
ஜனாதிபதி திசாநாயக்க தேர்தலுக்கு முன்பு இலங்கை கிரிக்கட் சபையை விமர்சித்தார், ஆனால் அவர் வெற்றி பெற்ற பிறகு அதைப் புறக்கணித்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், இறுதியாக அவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதேநேரம் ஷம்மி சில்வா ஜனாதிபதியிடம் பதவி விலக மேலும் ஒரு வார காலம் அவகாசம் கேட்டிருப்பதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் ஷம்மி சில்வா பதவி விலகிய பின்னர் கிரிக்கட் சபையில் நடந்தேறிய விடயங்களுக்கு பொறுப்பேற்று கொள்வாரா என்ற கேள்வி நம் முன் இருப்பதாக ‘டெய்லி மிரர்’ சுட்டிக்காட்டியுட்டுள்ளது.







