பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் கோரிக்கையை மேற்கோள் காட்டி, ஈரான் மீதான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரான் அரசாங்கம் “கடுமையாகப் பிளவுபட்டுள்ளதால் அதன் தலைவர்கள் ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவை முன்வைக்க நேரம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஈரான் துறைமுக முற்றுகையை அமெரிக்கா தொடரும் என்றும், இராணுவப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் ஈரான் பிரதிநிதிகள் ஒரு முன்மொழிவைச் சமர்ப்பித்து, பேச்சுவார்த்தைகள் முடிவடையும் வரை போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் என்றும் டிரம்ப் மேலும் கூறியுள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இந்த வாரம் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கவிருந்தன. எனினும் அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் திட்டமிட்டபடி பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை.

இதேநேரம் பேச்சுவார்த்தைகளுக்கு வரப்போவதில்லை என்று ஈரான் பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவிடம் கூறியதாக ஈரானின் அரசு ஊடகமான தஸ்னிம் தெரிவித்தது.

பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது நேர விரயம், என்றும் அமெரிக்கா எந்தவொரு பொருத்தமான உடன்பாட்டையும் எட்டுவதைத் தடுக்கிறது என்றும் ஈரான் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here