இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் ஒருநாள் மற்றும் T20 தொடர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளன.
இதில் ஒருநாள் தொடருக்கான 21 பேர் கொண்ட இலங்கை உத்தேச அணி ஒன்று தேர்வு செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அந்தக் குழாத்தில் இருக்கும் வீரர்களில் இருந்தே 15 வீரர்களைக் கொண்ட இறுதி குழாம் தேர்வு செய்யப்படும்.
இவ்வாறு தேர்வு செய்யப்படும் இறுதிக் குழாம் விளையாட்டுத் துறை அமைச்சரின் அனுமதியை பெற எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் நியமிக்கப்பட்ட உபுல் தரங்க தலைமையிலான புதிய தேர்வுக் குழுவினால் இந்த குழாம் தெரிவு செய்யட்டுள்ளது.
புதிய தெரிவுக் குழுவினால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் முதல் அணியாக இது உள்ளது.
இந்த புதிய குழாத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதோடு சில புதிய வீரர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ண போட்டியில் ஆடிய குசல் பெரேரா, திமுத் கருணாரத்ன, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமன்த, கசுன் ராஜித்த, மதீஷ பதிரண, அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் லஹிரு குமார ஆகியோர் இந்த உத்தேச அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சஹன் ஆரச்சிகே, சாமிக்க குணசேகர, அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ, ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், அக்கில தனஞ்சய, அசித்த பெர்னாண்டோ, ஜெப்ரி வென்டர்சே போன்ற புதிய மற்றும் இலங்கை அணிக்காக ஆடிய வீரர்கள் இந்த உத்தேச அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உலகக் கிண்ணத்தில் ஆடி காயத்தால் விலகிய அணித் தலைவர் தசுன் ஷானக்கவும், உபாதை காரணமாக உலகக் கிண்ணத்தில் பங்கேற்காத சுழற்பந்து சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவும் இந்த உத்தேச அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி சிம்பாப்வே அணி இலங்கைக்கு வருகைதரவுள்ளது.
இவ்விரு அணிகளும் ஜனவரி 6, 8 மற்றும் 11 ஆம் திகதிகளில் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளன.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகளைக் கொண்ட T20 தொடரும் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.