வவுனியா சமனங்குளம் பகுதியில் கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்த யுவதியின் உடல் இன்று (19) நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த தவரூபன் லக்சிகா என்ற யுவதியின் உடலே இவ்வாறு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான கண்களில் கண்ணீர்மல்க யுவதியின் உடல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
தவரூபன் லக்சிகா என்ற யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கிணற்று மோட்டரை இயக்க முயற்சித்த வேளை அதன் குழாய் கழன்றமையால் அதனை பூட்ட முயற்சித்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தொடர்ச்சியாக கிணற்று மோட்டர் இயங்கிக் கொண்டிருப்பதை அயல் வீட்டார் ஒருவர் அவதானித்துள்ளார்.
இதையடுத்து, அயல் வீட்டார் கிணற்றடிக்கு சென்று கிணற்று மோட்டரை அணைத்து விட்டு இது குறித்து வீட்டாருக்கு அறிவித்துள்ளார்.
குறித்த யுவதி நீண்ட நேரமாக காணாமல் போயிருந்த நிலையில், சந்தேகம் ஏற்பட்டதையடுத்து வீட்டாரும் அயல் வீட்டாரும் பிரதேச மக்களும் சேர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர தேடுதலின் பின்னர் யுவதி கிணற்றிற்குள் விழுந்து கிடந்தமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பிரதேச இளைஞர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட யுவதி வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை உடல் பிரேத பரிசோதணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது