தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் சினிமாக்களில் நடிப்பது மட்டும் இல்லாமல், ஒரு படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு வருகை புரியும்போது, பல்வேறுவிதமான முறையில் படம் பார்க்க வருவார். பல படங்களுக்கு படத்தின் கதநாயகனின் கதாபாத்திரத்தைப் போலவே மேக்கப் போட்டுக் கொண்டு வருவார். இது பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.
தொடர்ந்து கவனிக்கப்படும் இவருக்கு யூட்யூப் சூப்பர் ஸ்டார் என செல்லப் பெயரும் இணையவாசிகள் மத்தியில் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கோட் படம் பார்க்க வந்த நடிகர் கூல் சுரேஷ், ஒரு ஆட்டையும் தன்னுடன் பிடித்து வந்துள்ளார். மேலும் அந்த ஆட்டினை பந்தயத்திற்கு விடுவதைப் போலவும் சைகை காட்டினார். அதன் பின்னர் ஆட்டைத் தனது தோளில் சுமந்து கொண்டு, ‘ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா விஜய் சார் படத்தைப் பார்த்து ஆடுங்கடா’ என பாடினார். கோட் என்றால் ஆடு என்று பொருள் அதனால்தான் ஆடுடன் வந்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, நமக்கு அருகில் இருக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கோட் படத்திற்கு அதிகாலை 4 மணிக் காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் விஜய் சாரின் கோட் படத்திற்கு மட்டும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை எனக் காட்டமாக கூறியுள்ளார். கூல் சுரேஷின் இந்த பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.