முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணெய் வெளியேறி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த விடயம் நேற்று (07) கண்டறியப்பட்டுள்ளதாக உடையார் கட்டு கிராம சேவையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குரவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று மழை வெள்ளத்தினால் கிணறுக்குள் வெள்ள நீர் நிரம்பியுள்ள நிலையில் கிணற்றினை சுத்தம் செய்வதற்காக நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு இறைத்துள்ளார்கள்.
இதன்போது கிணற்று நீருடன் மண்ணெண்ணெய் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் காணி உரிமையாளர்களை கேட்டபோது 2012 ஆம் ஆண்டு மீள்குடியேறிய பின்னர் 23 அடி ஆழம் கொண்ட கிணறினை தோண்டி கட்டியுள்ளனர்.
தற்போது கிணற்றினை சுத்தம் செய்யும் போது முதல் கருநிறத்தில் காணப்பட்ட கிணற்று நீரில் பின்னர் மண்ணெண்ணெய்! மணக்கத்தொடங்கியுள்ளது.
கிணற்று நீரின் மேற்படலம் மண்ணெண்ணெயாய் தொடர்ச்சியாக காணப்பட்டுள்ளது.இந்த நிலையில் வாளியால் தண்ணீரை அள்ளி அதில் ஒரு இலையினை நனைத்து அதனை பற்றவைத்தபோது அந்த இலை எரிந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக கிராம சேவையாளர் ஊடாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை உடையார்கட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.