பிரபல பங்காளதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் அரசியலில் களமிறங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அவர் தனது நாட்டின் 12 வது பாராளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாவட்டமான மகுரா-1 தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
இத்தேர்தலில் அவாமி லீக் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளார் எனவும் இத்தேர்தல் ஜனவரி 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷகிப் அல் ஹசன் சமீபத்தில் 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியை தலைவராக வழிநடத்தினார்.
ஷகிப் அல் ஹசன் தலைமையிலான பங்காளதேஷ் அணி 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டு ஆட்டங்களில் மாத்திரம் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்திருந்தது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான அவரது முடிவு, அவர் தேர்தலுக்காக பிரச்சாரப் பணியில் ஈடுபடும் போது அவரது கிரிக்கெட் கடமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் பங்களாதேஷின் கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து பங்களாதேஷின் முன்னாள் அணித்தலைவர் மஷ்ரஃப் மோர்டாசா தேர்தலில் போட்டியிட்டு நரைல் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினரானார்.
அதேபோல், 2009 ஆம் ஆண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் நஸ்முல் ஹசன் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
இவர்களைத் தொடர்ந்து அரசியலில் களமிறங்கும் அடுத்த பங்களாதேஷ் வீரராக ஷகிப் அல் ஹசன் விளங்குகிறார்.