2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொது ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் எரிபொருள் விலை உயர்ந்ததால், தற்போது மின்சாரம் தயாரிப்பது அதிக செலவு மிக்கதாக உள்ளது. நிலக்கரி விநியோகத்திலும் சிக்கல்கள் உள்ளன. இதனால் ஏப்ரல் 27 அன்று சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட மதிப்பீடு,அதிகரித்த உற்பத்தி செலவுகளை பிரதிபலிக்கிறது என ஆணைக்குழு கூறியது.
மின்சார நிறுவனத்திற்கு கூடுதலாக ரூ. 38 பில்லியன் தேவை என நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் நிறுவனம் கணித்துள்ளது, எனினும் கட்டண உயர்வில் இருந்து மக்களை பாதுகாக்க 15 பில்லியன் வழங்க உள்ளதாக அரசாங்கம் என உறுதியளித்துள்ளது
இதற்கமைய, 95% வீடுகள் — ஏறக்குறைய அனைத்து வீடுகளும், வழிபாட்டுத் தலங்கள் — கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், சிறிய ஹோட்டல்கள் — மாதத்திற்கு 180 யூனிட்டுகளுக்கும் குறைவாகப் பயன்படுத்தும் சுற்றுலா ஹோட்டல்கள் சில அரசு அலுவலகங்கள் + பொதுப் பணிகள், முதல் தொகுதி தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கும் கட்டண உயர்வுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிலக்கரி விநியோகப் பிரச்சினைகள் தொடர்பான மேலதிக செலவுகள் நுகர்வோர் மீது சுமத்தப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மதிப்பீடு குறித்த எழுத்துப்பூர்வமான கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் 2026 மே 6 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
அதே நாளில் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வாய்மொழி கூட்டம் நடைபெறவிருக்கிறது.
மக்கள் தம் கருத்துக்களை தபால், மின்னஞ்சல், வாட்ஸ்அப் அல்லது தொலைநகல் வழியாக கருத்துக்களைச் சமர்ப்பிக்கலாம்; இதேநேரம் வாய்மொழி கலந்துரையாடல்களை முன்கூட்டியே பதிவு செய்தல் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணங்கள் மீதான இறுதி முடிவை 2026 மே 9 ஆம் திகதி அறிவிப்பதற்கு முன்னர், பெறப்பட்ட அனைத்துக் கருத்துக்களும் பரிசீலிக்கப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.








