களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த 3 பேர் பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட நிலையில் அதனை செலுத்தியவர் மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து கீழே தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பழுகாமம் பட்டாரபுரத்தைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஈஸ்வரன் தியாகராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நண்பர்கள் இருவருடன் சூட்டி ரக மோட்டார் சைக்கிளில் சம்பவதினமான இன்று காலை பழுகாமத்தில் இருந்து பெரிய போரதீவு பிரதேசத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்த போது ஆத்துக்கட்டு பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது குறித்த நபர் தவறி மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து கீழே தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இதைனையடுத்து பொலிசார் பொதுமக்களின் உதவியுடன் நீரில் மூழ்கி உயிரிழந்தவரையும் மோட்டர் சைக்கிளையும் மீட்டதுடன் அவருடன் பயணித்த இரு நண்பர்களையும் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.








