வடமாகாணத்தில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பற்ற சூழலியே தமது சேவையினை முன்னெடுக்கின்றார்கள் என உதயன் குழுமத்தை சேர்ந்தவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார் .
தாக்குதலுக்குள்ளான சுயாதீன ஊடகவியலாளர் தம்பிதுரை பிரதீபனின் வீட்டினை நேரடியாக சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் பல தடவைகள் திரும்பத் திரும்ப கூறியிருக்கின்றேன் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அற்ற சூழலில் தங்களுடைய சேவைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இவ்வாறு பல சம்பவங்கள் கடந்த காலங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட சம்பவங்களுக்கு நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டிருக்குமானால் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்றிருக்காது.
தம்பித்துரை பிரதீபன் ஒரு சுயாதீன ஊடகவியலாளராக தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கு பல ஊடகங்களின் ஊடாக பணியாற்றி வருகின்றவர்.
இந்த நிலையில் நேற்று இரவு காடையர்கள் சிலர் குறித்த ஊடகவியலாளரின் மற்றும் அவரது குடும்பத்தாரினுடைய மனநிலை பாதிக்கும் வகையில் இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.
இது குறித்து பொலிசார் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளார்கள்.
ஆனால் 40 வருடம் பத்திரிகையினை நடத்தியவன் என்ற வகையில் எந்த ஒரு தாக்குதலுக்கும் இதுவரை தீர்வு கிடைக்கப் பெறவில்லை.
மேலும் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிகின்றேன். இனிமேலாவது இவ்வாறான விடயங்களுக்கு குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.அப்பொழுதே சுதந்திரமாக தமது பணியினை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஊடகவியலாளர்கள் என்பவர்கள் சுதந்திரமாக துணிவுடன் செயற்பட வேண்டியவர்கள் அவர்கள் பயந்து செயற்பட முடியாது.
அரசாங்கம் முதல் அதிகாரிகள் மட்டம் வரை இதற்கு உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.