நாட்டில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சகல வாகனங்களிலும் இன்று நள்ளிரவு முதல் (19)பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பு பட்டிகளை (சீட் பெல்ட்) அணிவது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
வாகன சாரதிகளுக்கு வழங்கப்பட்ட ஒரு வருட கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரனகல ஊடகங்களிடம் தெரிவித்தார்.
நாளை (19) முதல் வாகன பாதுகாப்பு பட்டியை (சீட் பெல்ட்) அணியாது பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சீட் பெல்ட் அற்ற வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த விதி முன் மற்றும் பின் இருக்கை பயணிகள் இருவருக்கும் பொருந்தும் என பொலிஸார் தெரிவித்ததுடன், பாதுகாப்பு பட்டி அணியாமல் இருப்பது வீதி விபத்துக்கள் மற்றும் காயங்களின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது என்றும் குறிப்பிட்டனர்.
அமுலாக்கம் அபராதம் விதிப்பதை மாத்திரம் நோக்கமாகக் கொண்டதல்ல, உயிர்களைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டது என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரனகல வலியுறுத்தினார்.
பின் இருக்கை பயணிகளும் பட்டியை அணிய வேண்டும் என்றும், பட்டிகள் இல்லாத வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய முயற்சிக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.







