சமூக வலைத்தள பதிவு காரணமாக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளுக்கு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் தனது முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆகியோர் சிவராசா சார்பான தங்களது இராஜதந்திர பணியின் ஆரம்பக் கட்டமாக புதன்கிழமை மாலைதீவில் நஷீத்தை சந்தித்தனர்.

இதன்போது, முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அனோஜன் சிவராசா தெரிவித்த கருத்துக்களின் தீவிரத்தன்மையை நஷீத் ஒப்புக்கொண்டார், எனினும் மனிதாபிமான அடிப்படையில் அந்த இளைஞனின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவிற்கு விசேட இராஜதந்திர தூதுவர்களாக முஸ்தபா மற்றும் குமாரப்பெருமவை அனுப்ப இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது, இந்த நடவடிக்கையை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் தலையீட்டைத் தொடர்ந்து இரு சட்டத்தரணிகளும் இந்த பணியை மேற்கொள்வதாகவும், பயணத்திற்கு அரசாங்க பணத்தை பயன்படுத்தாது, தங்கள் சொந்த நிதியை பயன்படுத்துவார்கள் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நஷீத்துடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததாகவும், எதிர்வரும் நாட்களில் சவூதி அரேபியாவிற்கு பயணம் செய்ய தயாராகி வருவதாகவும் குமாரப்பெரும தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here