அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை) சர்வதேச எண்ணெய் விலையில் கூர்மையான மாற்றங்களை அவதானிக்க முடிகிறது.
சர்வதேச அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெய் 3% க்கும் அதிகமாக அதிகரித்து ஒரு பீப்பாய் சுமார் 78.50 அமெரிக்க டொலராகவும், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இடைநிலை (WTI) கச்சா எண்ணெய் 3% க்கும் அதிகமாக கூடி ஒரு பீப்பாய் 73.70 அமெரிக்க டொலராகவும் வர்த்தகமாகியுள்ளது.
சமீபத்திய பதற்றம் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தெற்கு ஈரான் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளது என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் பந்தர் அப்பாஸ், சிரிக், ஜஸ்க் துறைமுக நகரங்களிலும், கேஷம் தீவிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன
இதேவேளை, வளைகுடாவிலிருந்து விநியோகிக்கப்படும் எண்ணெய் ஓட்டத்தில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் உலகளாவிய விநியோகம் மேலும் இறுக்கமடைந்து விலைகள் மேலும் அதிகரிக்க கூடும் என்றும் முதலீட்டாளர்கள் கவலை தெரிவிப்பதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பதில் தாக்குதல்கள் காரணமாக சர்வதேச எரிசக்தி சந்தைகளில் நிச்சயமற்ற தன்மை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






