‘‘சேவை ஏற்றுமதியின் அடிப்படையில் 15 சதவீத வரி விதித்து தேசிய இறைவரிச் சட்டத்துக்கு அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளினூடாக ஆக்கபூர்வமான இளைஞர்கள் மற்றும் தொழில் முயற்சியாண்மை ஊக்கமிழந்துள்ளது. இது எமது நாட்டின் தொழில்முனைவை முழுமையாக அழிக்கும் செயற்பாடாகும்.

அரசாங்கத்துக்கு டொலர் அவசியமாக இருக்கும்போது இவர்கள் என்ன சூழ்ச்சி செய்கிறார்கள்’’ என சர்வசன அதிகாரம் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர கேள்வி எழுப்பினார்.

அந்தக் கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (26/02/2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 21ஆம் திகதி அவசரமாக வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் தேசிய இறைவரி சட்ட திருத்தத்துக்கான சட்டமூலமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

சுருக்கமாக கூறுவதென்றால், இலங்கைக்கு அப்பால் சென்று 180 நாட்களை விட குறைந்த நாட்களில் ஏதாவது சேவையை பெற்றுக்கொடுத்து அதனூடாக டொலர் வருமானத்தை பெற்றுக்கொண்டால் சகல வருமானத்துக்கும் 15 சதவீத வரி விதிக்கப்படுமென்றே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுமையான சொற்களும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வங்கி கட்டமைப்பினூடாக பணம் அனுப்பி வைக்கப்பட்டால் என்ற வசனமும் கையாளப்பட்டுள்ளது. அப்படியென்றால் இதில் யூ டியூப் செனல்களை நடத்துபவர்கள், பேஸ்புக் கணக்குகளை முன்னெடுப்பவர்கள், அவற்றினூடாக டொலர் உழைப்பவர்கள், பைபர் போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி ஆக்கபூர்வமாக செயற்படும் இளைஞர்கள், வெளிநாட்டு விரிவுரை சேவைகளை செய்யும் சட்டத்தரணிகள், வைத்தியர்கள், கணக்காய்வாளர்கள் என சகலரும் இந்த விசேட வரிக்கு உட்படுவார்கள்.

இது எமது நாட்டின் தொழில்முனைவை முழுமையாக அழிக்கும் செயற்பாடாகும். அதுமாத்திரமல்லாமல் இதனூடாக உண்டியல் மோசடிகள் மேலும் வலுவடைந்து வருமானத்தை இழக்க நேரிடுமே தவிர வருமானம் கிடைக்காது. அரசாங்கத்துக்கு டொலர் அவசியமாக இருக்கும்போது இவர்கள் என்ன சூழ்ச்சி செய்கிறார்கள்.

இந்த சூழ்ச்சியின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? எனவே, இந்த அநீதியான வரியை நீக்குவதற்காக கட்சி நிற பேதமின்றி ஒரு குரலாக சகல இளைஞர்களும் ஒன்றுபடுவோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here