அரச அதிகாரிகளின் அலுவலகப் பணிகளை எளிதாகவும், வினைத்திறனாகவும் மாற்றும் வகையில் டிஜிட்டல் கையொப்பம் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன தெரிவித்ததாவது, தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி மக்கள் எதிர்பார்க்கும் திறமையான சேவையை வழங்குவதாகும்.
நேற்று (15) உள்நாட்டு அலுவல்கள் பிரிவின் பொது அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்ப அங்கீகார நிகழ்வில் கலந்துகொண்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
2006 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் அடிப்படையில், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளின் கையொப்பங்களை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறை இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கடிதங்கள் மற்றும் ஆவணங்களைச் செயலாக்குவதில் ஏற்படும் தாமதங்கள் தவிர்க்கப்பட்டு, வேகமான மற்றும் பயனுள்ள சேவையை பொதுமக்களுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லங்காபே (LankaPay) நிறுவனம், மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின்படி டிஜிட்டல் கையொப்பங்களை வழங்கும் அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.








