இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2026 மார்ச் மாதம் பதவியேற்றதிலிருந்து தனது முதல் இருதரப்பு வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுடன் புது டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இன்று(23) நேபாளத்திற்கு 1.62 பில்லியன் டொலர் பொருளாதார உதவித் தொகுப்பை அறிவித்துள்ளார். இந்த பயணத்தின் போது எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகியதுடன், ஆறு உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஷா நவம்பர் 22 முதல் 23 வரை இரண்டு நாள் பயணமாக இந்தியாவில் உள்ளார். எட்டு ஒப்பந்தங்களும் காவல்துறை, தடயவியல் அறிவியல், குடிமைப் பணி பயிற்சி, பாரம்பரிய மருத்துவம், செயற்கைக்கோள் தொடர்பு, நிலையான நகர்ப்புற மேம்பாடு, சுகாதாரம் மற்றும் கால்நடை மற்றும் மீன்வளம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சுமார் 1,500 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 5,200 பேர் காணாமல் போனதாகவும் இறந்துவிட்டதாக கருதப்படுவதாகவும் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த உதவி வழங்கப்படுகிறது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊடகங்களிடம் பேசிய மோடி, இந்த ஆண்டு எண்ணெய் விநியோக சிரமங்கள் இருந்தபோதிலும், இந்தியா நேபாளத்திற்கு எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து வழங்கியதாக கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வெறும் அண்டை நாடுகள் என்பதை விட நெருக்கமானவை என்றும், அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டவை என்றும் அழைத்த மோடி: “எங்கள் மகிழ்ச்சிகள் பகிரப்படுகின்றன. எங்கள் சவால்களையும் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். நாங்கள் ஒருவருக்கொருவர் முன்னேற்றத்தில் பங்காளிகள் மற்றும் கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கிறோம். இந்தியா-நேபாள உறவுகளில் ஒரு பொற்கால அத்தியாயத்தை நாம் ஒன்றாக எழுதுவோம்” எனத் தெரிவித்தார்.

இருதரப்பு உறவுகள் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதாக ஷா தெரிவித்தார். “பரஸ்பர மரியாதை, உறுதியான நம்பிக்கை மற்றும் தடையற்ற நல்லெண்ணம் ஆகியவை இந்தியா-நேபாள உறவுகளின் அடித்தளம்” என்று அவர் கூறினார், மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் “இமயமலையைப் போல உறுதியானவை மற்றும் பெருங்கடல்களைப் போல பரந்தவை” என்றும் தெரிவித்தார்.

ஒப்பந்தங்களின் கீழ், காந்திநகரில் உள்ள இந்தியாவின் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகம், நேபாள காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையுடன் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் ஒத்துழைக்கும், அதே நேரத்தில் தனி ஒப்பந்தம் ஒன்று ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தை நேபாளத்தின் தேசிய காவல்துறை அகாடமியுடன் இணைக்கிறது.

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகள் துறையின் கீழ் உள்ள இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையம், நேபாள குடிமைப் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக நேபாள நிர்வாக பணியாளர் கல்லூரியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது, மேலும் இரு தரப்பினரும் ஆயுர்வேதம் மற்றும் பிற பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒத்துழைக்கவும் ஒப்புக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here