இந்த ஆண்டு இதுவரை இலங்கையில் 81,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், 61 மரணங்கள் சம்பவித்துள்ளதாக தேசிய டெங்கு கண்காணிப்பு முறைமையின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜூலை 25 நள்ளிரவு வரை புதுப்பிக்கப்பட்ட தரவுகளுக்கமைய, மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிக நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அத்துடன் கொழும்பு மாவட்டமும் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை, கண்டி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கணிசமான அளவில் டெங்கு தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
ஜூலை மாதம் மட்டும் 26,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
இதன் மூலம் 2026 ஆம் ஆண்டில் அதிக நோயாளிகள் பதிவான மாதமாக ஜூலை அமைந்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் 29 ஆவது வாரத்தில் 175 உயர் ஆபத்து கொண்ட சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நள்ளிரவு நேர சராசரி டெங்கு நோயாளர் எண்ணிக்கை 2,300 க்கும் மேல் என பதிவாகியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் டெங்கு பரவல் தொடர்வதால், நுளம்பு இனப்பெருக்க இடங்களை அழிப்பது உட்பட தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.








