தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் மழை,காற்றுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேநேரம் காங்கேசன்துறையில் இருந்து மன்னார், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ ஆகவும், அலைகளின் உயரம் சுமார் 3 மீட்டர் வரையிலும் செல்லக்கூடும்.
எனவே கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் அடுத்த அறிவிப்பு வரும் வரை குறித்த கடல் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் தாழ்நில பகுதிகளில் வசிப்பவர்கள் மழை வெள்ளம் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.








