நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் தோட்ட தொழிலாளர்களுக்கு 50ரூபாவை பெற்றுக்கொடுக்க வக்கில்லாதவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களை எப்படி சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கல் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று (12) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்கட்சி தலைவர் கொத்மலை பகுதியில் வைத்து தோட்ட தொழிலாளர்களுக்கு 2,500 ரூபா சம்பளத்தை பெற்று தருவதாக எதற்கு கூறினார். எதிர்கட்சி தலைவரை வழிநடத்தும் முறை தவறாக காணப்படுகிறது அதற்கு அவரை குற்றம் சொல்லி தவறில்லை அவர் அருகாமையில் இருக்கின்ற மலையக தலைமைகள் முறையாக இல்லை.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இருந்தமையால் தான் தோட்ட தொழிலாளர்களுக்கு 1,350 ரூபாயை பெற்றுக்கொடுக்க முடிந்தது. அன்று நாங்கள் அரசாங்கத்தில் இருக்கவில்லை ஆனால் அரசாங்கத்தோடு இருந்தவர்களுக்கு 50 ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியவில்லை நாட்டின் தலைமைத்துவத்தை தவிர மலையகத்தின் தலைமைத்துவம் தான் முக்கியம் இதுவரையிலும் எந்த இடத்திலும் மலையகத்தையும் மலையக மக்களையும் தலைகுனிய செய்ததில்லை. எனக்கு இன்று வயது 29 உலகத்தில் உள்ள 90 இளம் தலைவர்களில் நானும் ஒருவன்.
1,700 ரூபா சம்பளம் பெற்றுதருவதாக கூறி இன்று 1,350 ரூபாய் பெற்றுக்கொடுத்துள்ளதாக விமர்சனத்தை முன்வைக்கின்றார்கள் ஆரம்பத்தில் 1,350 ரூபா அடிப்படை சம்பளம் என முன் கூட்டியே நாங்கள் அறிவித்திருந்தோம்.
எந்த இடத்திலும் அடிப்படை சம்பளம் 1,700 ரூபா என அறிவிக்கவில்லை ஆனால் ஊக்கிவிப்பு கொடுப்பனவு 350 ரூபாவை கட்டாயம் நாங்கள் பெற்றுக்கொடுப்போம் சம்பள பிரச்சினையை பொருத்தவரையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்போதுமே மக்களுக்கு தீர்வினை பெற்று தந்துள்ளது .
தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுத்த சம்பளத்தை விமர்சிப்பவர்களுக்கு ஒன்றை நான் கூறுகிறேன். இ.தொ.கா.பெற்றுக்கொடுத்த சம்பளத்தை விமர்சனம் செய்பவர்கள் முடிந்தால் அந்த சம்பளத்தை வாங்குவதற்கு மறுப்பு தெரிவியுங்கள் சிலருக்கு ஜனாதிபதி வழங்கிய அஸ்வெசும, காணி உறுதிபத்திரம், கேஸ் எரிப்பொருள், மின்சாரம், குடிநீர், சம்பளம் அனைத்தும் வேண்டும் ஆனால் ஜனாதிபதி ரணில் வேண்டாமென சிலர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக அறிவித்துள்ளார்.
மலையகத்தில் அடுத்த தலைமுறையை கொண்டு போகும் இளைஞன் நான் ஒரு தோட்டத்தில் நூறு குடும்பங்கள் இருந்தால் அவர்களுக்கான காணி முதலில் ஒதுக்கப்பட வேண்டும் மாற்றம் வேண்டுமானால் தங்களது குழந்தைகள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். மலையக மக்கள் மத்தியில் இன்று தவறான கருத்துக்களை கொண்டு சென்று மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர் மக்கள் தெளிவாகயிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.








