ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியாபார நிலையங்கள் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன அல்லது தீப்பிடித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க குமாமோட்டோ கோட்டையின் சுவர்களும் சேதமடைந்துள்ளன.
இதேநேரம் சுமார் 40,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு கைபேசி சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புல்லட் ரயில் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதோடு குமாமோட்டோ விமான நிலைய ஓடுதளமும் மூடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் சுமார் 1 மீட்டர் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது திரும்ப பெறப்பட்டது.
நிலநடுக்கத்தால் குறித்த பகுதியில் உள்ள அணு மின் நிலையங்களுக்கு எந்த சேதமும் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த ஒரு வாரத்திற்குள் மேலும் பின்னதிர்வுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






