இலங்கைக்கு கடத்துவதற்காக தங்கச்சிமடம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.6 இலட்சம் மதிப்பிலான 175 கிலோ ஏலக்காய் மூட்டைகளை இன்று வெள்ளிக்கிழமை (30.05.2025) அதிகாலை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு நாட்டுப் படகில் கஞ்சா, கடல் அட்டை, பீடி இலை பொதிகள், ஏலக்காய், சுக்கு, செருப்பு மற்றும் திமிங்கலம் துடுப்பு உள்ளிட்டவைகள் கடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தங்கச்சிமடம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு  படகில் ஏலக்காய், சுக்கு, வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் கடத்த இருப்பதாக இராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (5/30/2025) அதிகாலை தங்கச்சிமடம் அடுத்த அய்யன் தோப்பு கடற்கரை கிராமத்தில் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

இதன் போது அங்கிருந்த வீட்டில் இலங்கைக்கு படகில் கடத்திச் செல்வதற்காக 7 மூட்டைகளில் 175 கிலோ ஏலக்காய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஏலக்காய் மூட்டைகளை பறிமுதல் செய்து  தங்கச்சிமடம் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக தலைமறைவான வீட்டின் உரிமையாளரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஏலக்காய், இந்திய மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் எனவும் ஏலக்காய் மூட்டைகள் இராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

[மன்னார் நிருபர்எஸ்.ஆர்.லெம்பேட்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here