இராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக லொரியில் கொண்டு வரப்பட்ட பீடி இலை பண்டல்களை கியூ பிரிவுபொலிசார் மடக்கிப் பிடித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் வெள்ளரி ஓடை பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் இருந்து சமையல் மஞ்சள், சுக்கு, கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலை பண்டல்கள் உள்ளிட்டவைகள் அதிக அளவு இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று (30) அதிகாலை இராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரை யிலிருந்து இலங்கைக்கு பீடி இலை பண்டல்கள் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்த இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு பொலிசார் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது கண்டெய்னர் லொரி ஒன்றில் இருந்து இலங்கைக்கு பீடி இலை பண்டல்களை படகில் ஏற்றி கொண்டிருந்தபோது பொலிசார் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்ற வேளை படகில் இருந்த இருவர் 10 மூட்டை பீடி இலை பண்டல்களுடன் கடல் வழியாக தப்பினர்.
மேலும் பீடி இலை ஏற்றி வந்த கண்டெய்னர் லொரியை பறிமுதல் செய்த கியூ பிரிவு பொலிசார் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வெள்ளரி ஓடை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை பிடித்து இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் கடல் வழியாக தப்பிச் சென்ற மர்ம நபர்கள் இருவர் குறித்து கியூ பிரிவு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(மன்னார் நிருபர்-லம்பேர்ட்)








