ரியாத்தில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (UL-266) விமானத்தில் இரண்டு பணிப்பெண்களை தாக்கியதாக, 28 வயதான சவூதி பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (அக்டோபர் 26) அதிகாலை 6.32 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தபோது இடம்பெற்றது.
அந்தச் சவூதி பயணி, விமானம் தரையிறங்குவதற்கு முன் பயணிகள் அனைவரும் இருக்கைப் பட்டைகளை அணிய வேண்டிய நேரத்தில் கழிவறைக்குச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிப்பெண்கள் இதனைத் தடுக்க முயன்றபோது, அவர் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
விமானப் பணிப்பெண்கள் சம்பவத்தை விமானிக்குத் தெரிவித்ததை அடுத்து, விமான நிலைய காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், சந்தேகநபர் உடனடியாக கட்டுநாயக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது, கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை மற்றும் சுற்றுலா காவல்துறை பிரிவுகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
இச்சம்பவம் இலங்கை வான்வெளிக்குள் நடைபெற்றிருந்ததால், குறித்த சவூதி பிரஜை இன்று (அக்டோபர் 27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.








