முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான வழக்கொன்றில் அவுஸ்திரேலியாவிலுள்ள ஒருவரின் சாட்சியைப் பதிவு செய்யக் கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அவுஸ்திரேலியா தொழிலதிபர் ஒருவரின் நிறுவனப் பங்குகளை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில் உதய கம்மன்பிலவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
போலி சட்டத்தரணி அனுமதிப்பத்திரம் தயாரித்து அவுஸ்திரேலிய தொழிலதிபருக்குச் சொந்தமான நிறுவனத்தின் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சாட்சியொன்றின் சாட்சியத்தைப் பதிவு செய்யக் கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜேனட் ஷெடிக் என்பவரின் சாட்சியத்தை இணையவழியில் பதிவு செய்வதற்கு அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவித உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதியான உதய கம்மன்பில நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அவுஸ்திரேலிய தொழிலதிபர் பிரையன் ஷெடிக்கிற்கு போலி சட்டத்தரணி அனுமதிப்பத்திரம் தயாரித்து அதன் மூலம் சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி, நல்லாட்சி அரசாங்கத்தின் போது, உதய கம்மன்பிலவுக்கு எதிராகச் சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.






