எரிபொருள் விலை திருத்தத்தின் போது நாட்டில் எரிபொருள் விலையில் குறைப்பை எதிர்பார்க்க இயலாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விளக்கமளிக்கையில், உலகளாவிய எண்ணெய் விலை மார்ச்/ஏப்ரல் மாதத்தை விட சற்று குறைவாக காணப்படுகின்ற போதும் சமீபத்திய மத்திய கிழக்கு மோதலுக்கு முன்னர் காணப்பட்ட விலையை விட தற்போது அதிகமாகவே காணப்படுகிறது.

தற்போதைய சர்வதேச எண்ணெய் விலை விபரம் இன்று மாலை வெளியாகவுள்ளது.விலை திருத்தத்துக்கு முன் கூட்டுத்தாபனம் அவற்றைச் ஆராயும். விலைகள் ஒரே மாதிரியாக காணப்படும் அல்லது சிறிதளவில் அதிகரிக்கும் என தகவகள் மூலம் அறிய முடிகிறது என குறிப்பிட்டார்.

இதேநேரம் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் பேசிய அவர்,89,000 மெட்ரிக் தொன் டபிள்யூடிஐ மசகு எண்ணெய் கொண்ட கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தது என்றும் 95,000 மெட்ரிக் தொன் மர்பன் மசகு எண்ணெய் கொண்ட மற்றொரு டேங்கர் மே 31 ஆம் திகதிக்குள் வர உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது போதுமான மசகு எண்ணெய் உள்ளது எனவும் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் விலை திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்திற்கு முன்னர் கலந்துரையாடல்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here