சமீபத்திய எரிவாயு தட்டுப்பாட்டுக்காக நுகர்வோரிடம் லாஃப்ஸ் (LAUGFS Gas PLC) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நளிந்த குருகுலசூரிய மன்னிப்பு கோரியுள்ளார்.
அதேவேளை, 12.5 கிலோ சிலிண்டரின் விலையை 1,775 ரூபாவால் அதிகரிக்க எடுத்த தீர்மானத்தை அவர் விளக்கியுள்ளார்.
பல வாரங்களாக நீடித்த தட்டுப்பாடு, சர்வதேச விநியோக இடையூறுகள் மற்றும் நிறுவனத்தின் ஹம்பாந்தோட்டை எரிவாயு (LPG) முனையத்தை பாதித்த ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் கலவையால் ஏற்பட்டதாக குருகுலசூரிய தெரிவித்தார்.
“நாட்டுக்கு பொறுப்புக்கூற வேண்டிய ஒரு நிறுவனமாக, எரிவாயு வழங்க முடியாமல் போனதால் எமது வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு நான் முதலில் மன்னிப்பு கோர வேண்டும்” என அவர் கூறினார்.
விலை அதிகரிப்பை விளக்கிய அவர், அதிகரித்து வரும் சர்வதேச எரிவாயு விலை, அதிகரித்த கப்பல் மற்றும் காப்புறுதி செலவுகள், நாணய மாற்று வீத ஏற்ற இறக்கங்கள் மற்றும் வரிகள் ஆகியவை நிறுவனத்தின் செலவுகளை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
12.5 கிலோ சிலிண்டருக்கான புதிய விலையான 6,741 ரூபா, மேலதிக இலாபம் ஈட்டுவதற்காக அல்ல, செலவுகளை ஈடுசெய்வதற்காகவே அவசியம் என்று அவர் கூறினார்.
“இது இலாபம் ஈட்டும் விலை அல்ல, செலவை ஈடுசெய்யும் விலை” என அவர் கூறியுள்ளார்.
முதலீட்டு சபையின் தணிக்கையைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், ஹம்பாந்தோட்டை முனையத்தில் இருந்து உள்நாட்டு சந்தைக்கு எரிவாயு வழங்கும் நிறுவனத்தின் திறனை பாதித்ததாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
ஏற்றுமதி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நிபந்தனைகளின் கீழ் உள்ளூர் சந்தைக்கு வெளியிட அனுமதிக்கப்பட்ட எரிவாயு அளவை நிறுவனம் மீறிவிட்டதாக அவர் விளக்கினார்.
இதன் விளைவாக, சர்வதேச எரிவாயு கிடைப்பது ஏற்கனவே அழுத்தத்தில் இருந்த நேரத்தில், லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் மாற்று விநியோக ஏற்பாடுகளைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
புதிய எரிவாயு கப்பல்கள் கிடைக்கப்பெற்று விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஹம்பாந்தோட்டையை பாதிக்கும் கட்டுப்பாடுகளை தீர்க்க அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் குருகுலசூரிய தெரிவித்தார்.
பயத்தில் கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு நுகர்வோரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். அத்தகைய செயல் விநியோகத்தில் மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.
விநியோகம் தொடர்வதால், வரும் நாட்களில் தட்டுப்பாடு குறையும் என நிறைவேற்றி அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.








