ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை 9.45 மணியளவில் தீ பரவத் தொடங்கியதாகவும், மூன்று மாடி தொழிற்சாலை கட்டிடம் முழுவதும் வேகமாக தீ பரவியதாகவும் கோட்டை தீயணைப்பு பிரிவின் பிரதம தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் 3 பேர் தீயில் சிக்கியிருப்பதாக தீயணைப்பு வீரர்கள் கருதியதாகவும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 3 சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ கட்டிடம் முழுவதும் பரவியிருந்ததால், பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை உடனடியாக அடைய முடியவில்லை என பிரதம தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. தற்போது தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

இதேநேரம் இந்த விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கைத்தொழில் பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க, தெஹிவளை, ஹொரணை மற்றும் கோட்டை மாநகர சபைகளின் தீயணைப்பு பிரிவுகளின் சேவையை இந்த தொழிற்சாலை பெற்றிருந்ததை அவதானித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் அதிக தொழிற்சாலைகள் இருந்தபோதிலும் ஹோமாகமவில் பிரத்தியேக தீயணைப்பு பிரிவு இல்லாமை குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

தீ விபத்திற்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here