பாராளுமன்றத்தின் அரச கணக்குகள் தொடர்பான குழு (COPA) மற்றும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (COPE) ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கான பல அறிக்கைகளை சட்டமா அதிபருக்கும், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிற்கும் பரிந்துரைக்க நாடாளுமன்ற அனுமதி கிடைத்துள்ளது.

இதற்கமைய, வெளிநாட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுக்கு வெளிநாட்டு பண அனுப்பல்களின் அடிப்படையில் முழுமையான மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டம் தொடர்பாக 2022 மே 1 முதல் 2023 செப்டம்பர் 15 வரை அமுல்படுத்தப்பட்ட திட்டம் குறித்து COPA குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை சட்டமா அதிபரின் அவதானிப்புகள் மற்றும் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக பரிந்துரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், COPE குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடையாளம் காணப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் உள்ள விடயங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவிற்கு பரிந்துரைக்கவும் பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை, ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை சபை, காணி சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம், இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை, லங்கா சதோசா, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கான அறிக்கைகள் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்படவுள்ளன.

2026 ஏப்ரல் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையியல் உத்தரவுகள் 119(4) மற்றும் 120(4) இற்கான திருத்தங்களின் ஏற்பாடுகளுக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here