இலங்கை காவல்துறை கடந்த ஜூலை 9 ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்பை (வாபஸ்) திரும்ப பெறுமாறு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கோரிக்கை விடுத்துள்ளது.

காவல்துறையின் அறிவிப்பில், “திடீரென கணிசமான சொத்துக்களைப் பெற்றுள்ள அல்லது சட்டபூர்வமான வருமான மூலம் இன்றி ஆடம்பர வாழ்கை வாழும் நபர்கள்” குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் காவல்துறை சேவையின் அடிப்படைப் பணியை இந்த உத்தரவு மீறுவதாக ஐக்கிய தேசிய கட்சி விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய இராச்சியத்தின் சுயாதீன விசாரணை அறிக்கையை மேற்கோள் காட்டிய கட்சி, காவல்துறையின் பணி “சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவது மற்றும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது” என குறிப்பிட்டது.

“காவல்துறை சேவையின் நோக்கம் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதும், சட்டத்தை மீறுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதுமாகும்” என கட்சி தெரிவித்தது.

மேலும் இலங்கையில் செல்வ வரி இல்லை என்பதை சுட்டிக்காட்டிய ஐ. தே.க, வெளிநாட்டு வேலை மூலம் கிராமப்புற குடும்பங்கள் சட்டப்பூர்வமாக சொத்துக்களைப் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும் பலர் வரி நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு குறைவு காரணமாக வருமானத்தை அறிவிக்க தவறியிருக்கலாம் எனவும் தெளிவான வழிகாட்டுதல்கள் இன்றி இவ்வாறு வெளியாகும் காவல்துறை உத்தரவு,துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தலுக்கான காரணமாக மாறக்கூடும் என்றும் கட்சி எச்சரித்துள்ளது.

இதுபோன்ற விவகாரங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வெளியிடுவதற்கு முன், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து கலந்துரையாட வேண்டும் என ஐ.தே .க வலியுறுத்தியது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here